top of page
Centre for Asia Studies - CAS

புத்தக விமரிசனம் : அகதியின் துயரம்; கர்னல் ஆர் ஹரிஹரன்

Article No. 002/2021

("அகதியின் துயரம்" ஆய்வு நூல். ஆசிரியர்: வி. சூரியநாராயண் ஆங்கில மூலம். தமிழாக்கம்: பெர்னார்ட் சந்திரா. பக்கங்கள் 136. பதிவு: பெப்ரவரி 2021. வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில் 692001, இந்தியா. விலை ரூ 160.)

ஐ. நூ. அகதிகள் அமைப்பின் 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் - அதாவது 795 லட்சம் மக்கள் - தங்கள் வீடுகளைத் துறந்து, அகதிகளாக வாழ்கிறார்கள் என்பது, நம்மில் பலருக்கு தெரியாத விவரம். அந்த ஆண்டில் மட்டும் உலக அகதிகள் எண்ணிக்கை 87 லட்சம் அதிகமாயிற்று என்பது உலக நாடுகள் உரத்து சிந்திக்க வேண்டிய விஷயம். ஐ. நா. அகதிகள் அமைப்பின் கூற்றுப்படி, நாம் இந்த வாக்கியத்தைப் படிக்கும் முதல் மூன்று விநாடிக்குள், உலகில் யாரோ ஒருவர் அகதியாக ஆக்கப்பட்டு இருப்பார்.

இந்தியா தொன்று தொட்டு அகதிகளாக தன்னை அண்டியவர்களை வரவேற்று, புகலிடம் அளித்து, அவர்களை வாழவைத்ததாக சரித்திரம் கூறுகிறது. ஐ. நா. அகதிகள் அமைப்பின் கணக்கின்படி, இந்தியாவில் ஜனவரி 2020-ம் ஆண்டு வரை, 210,201மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர். இதில் திபெத்தியர் (1,08,005), இலங்கையர் (95,230), பர்மியர் (21,049), ஆப்கானிஸ்தானியர் (16,333), மற்றவர் (3,477) அடங்குவார்கள். ஆனால், நம்மிடையே இந்த கணக்கில் சேராத, பதிவு செய்யப்படாத அகதிகளாக பலர், பங்களா தேசத்தவரும், இலங்கைத் தமிழர்களும் அவலமாக வாழ்வதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

இலங்கையில் இனப்போர் 2009ம் ஆண்டு முடிந்தாலும், 12 ஆண்டுகளுக்குப் பின் நம்மிடையே அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்? அவர்கள் அன்றாட பிரச்சினைகள் என்ன? அவர்கள் நாடு திரும்ப விடிவுகாலம் பிறக்குமா? அதுவரை, அவர்கள் பிழைக்க, குடும்பங்கள் வசிக்க, வேலை பார்க்க வழிகள் உண்டா? இவ்வாறு தோன்றும் பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண, பேராசிரியர் சூரியநாராயண் 136 பக்கங்கள் கொண்ட "அகதிகள் துயரம்" என்ற கையடக்கமான புத்தகத்தில், முற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

பேராசிரியர் சூரியநாராயண் சென்னை பல்கலை கழகத்தின் தென்கிழக்கு ஆசிய மையத்தின் இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அகதிகள் பிரச்சினை, முக்கியமாக இலங்கைத் தமிழ் அகதிகள், பற்றிய ஏழு புத்தகங்களில் அலசியவர். பல்வேறு கோணங்களில், புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைகளைப் பற்றி நம்மை சிந்திக்க வைக்கும் இந்த நூல், உலகெங்கும் உள்ள தமிழர்கள் படிக்க வேண்டியது அவசியம்.

ஏனெனில், 1983ல் இருந்து திரு சூரியநாராயண் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுடன் தொடர்பு கொண்டவர். அது மட்டும் அன்றி, ஐ. நா. அகதிகள் அமைப்புடனும், இந்திய மற்றும் தமிழக அரசுகளின் அகதிகள் சார்ந்த அதிகாரிகளுடனும், அகதிகளுக்கு உதவும் பத்திரிகையாளர் மற்றும் மனித நேய அமைப்புக்களுடனும் பரிச்சயப் பட்டவர்.

இந்த நூலில் உள்ள ஒன்பது அத்தியாயங்களில், அசாதாரண அகதிகள் என்ற முதல் கட்டுரை, உலக அளவில் வளர்ந்து வரும் இந்த பிரச்சினையை, மனிதாபிமான நெகிழ்ச்சியுடன் அலசுகிறது. இரண்டாம் கட்டுரை, இந்தியா எவ்வாறு அகதிகளை எதிர் கொண்டது என்பதை சரித்திரப் பார்வையோடு நோக்குகிறது. அதில், மகாத்மா காந்தி 1927ல் இலங்கை பயணத்தில் ஆற்றிய அறிவுரையில், மக்கள் பாலும் சர்க்கரையும் ஒருங்கிணைந்து சுவையூட்டுவது போல் வாழவேண்டும் என்ற உவமை, தற்போது இன சச்சரவுகளில் மூழ்கியுள்ள இலங்கை மட்டுமல்லாது, மற்ற தெற்காசிய நாடுகளுக்கும் பொருந்தும்.

மூன்று, நான்கு மேலும் ஐந்தாம் அத்தியாயங்கள் பல்வேறு காலகட்டங்களில், இலங்கையில் தோன்றிய அகதிகளின் பெருக்கத்தை அலசுகிறது. இந்தியா உட்பட, ஒரு தெற்காசிய நாடுகூட 1951ம் ஆண்டு உருவான ஐ. நா. அகதிகளுக்கான உடன் படிக்கையிலும் சரி, அதைத் தொடர்ந்து 1967ல் உருவான அகதிகளுக்கான நடைமுறைகளிலும் கையெழுத்து இடவில்லை. இதைத் தொடர்ந்து ஐ. நா. அகதிகள் சார்ந்த உயர் ஆணையத்தின் உதவியுடன், தலைமை நீதிபதி பி. என். பகவதி தலைமையில் உருவான மாதிரி சட்ட வரைமுறையை செயல் படுத்துவதின் அவசியத்தை ஆறாவது கட்டுரை வலியுறுத்துகிறது. தற்போது நமது நாட்டில் அகதிகளைப் பேணுவதில் உள்ள குறைபாடுகளை நீக்க அத்தகைய தேசிய அகதிகள் சட்டம் தேவை என்பதில் ஐயமில்லை.

எப்போது அகதிகள் இலங்கைக்கு திரும்புவார்கள்? இதற்கு உள்ள வழித்தடங்களை ஏழாம் அத்தியாயம் விவாதிக்கிறது. தடங்களை காண தடங்கல்கள் நீக்கப் படவேண்டும். தற்போதைய இந்திய, இலங்கை அரசுகள் இதை ஆதரிக்குமா?

2016ல் உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா தற்போது சட்டமாக்கப் பட்டுள்ளது. இதை வரவேற்கும் கட்டுரை அதை விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

கடைசி குறிப்பு: நான் இந்த புத்தகத்தை படித்து முடித்ததும், குறைந்த பக்கங்களில், இவ்வளவு செரிந்த கருத்துக்களா என்று என்னை வியக்க வைத்தது. என்னை சிந்திக்க வைத்த ஆசிரியர் சூரியநாராயணுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள். அதை அழகாக பிரசுரித்த காலச்சுவடு பதிப்பகத்துக்கும் நன்றி.

(கர்னல் ஆர் ஹரிஹரன், இந்திய ராணுவ நுண்ணறிவுத் துறையின் தெற்காசிய மற்றும் தீவிரவாதப் பிரிவுகளில் அனுபவம் பெற்றவர். இந்திய அமைதிப்படையில் 1987 முதல் 90 வரை சேவை புரிந்தவர். மின்னஞ்சல்: haridirect@gmail.com வலை தளம்: https://col.hariharan.info)

0 views0 comments

Related Posts

See All

Comments


LATEST
bottom of page